சீர்காழியில் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் அதிரடி ஆய்வு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நான்கு கடைகளை மூட அதிரடி உத்தரவு
சீர்காழி, நவ. 2: சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் திங்கள் கிழமை இரவு கோட்டாட்சியர் பாலமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக நான்கு கடைகளை மூட உத்தரவிட்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பொறையார், செம்பனார்கோயில், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் சீர்காழி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு கடைகளில் உரிமத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டும் பட்டாசுகளை விற்பனை செய்யப்படுகின்றதா, முறையாக உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா,விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகளில் அதிக அளவு பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா கடைகளுக்கு இரண்டு அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.அப்போது சில கடைகளில் சாலையில் தற்காலிக கொட்டகை அமைத்து கடை நீட்டிக்கப்பட்டதை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோட்டாட்சியர் எச்சரித்தார். மேலும் கடை உரிமத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் விதிமுறைகளை மீறினால் பட்டாசு கடைகளின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று பட்டாசு கடை உரிமையாளர்களை எச்சரித்தார். ஆய்வின் போது கொள்ளிடம் பகுதியில் எளிதில் தீப்பற்றும் வகையில் செயல்பட்டதாக மூன்று கடைகளில் மூட உத்தரவிட்ட கோட்டாட்சியர் சீர்காழியில் உரிமம் இன்றி செயல்பட்டதாக ஒரு பட்டாசு கடையையும் மூட உத்தரவிட்டார். அப்போது சீர்காழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ஜோஷி, கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.







