திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்!
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அமைக்கப்பட்ட வேலியை அகற்றியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு – டிஎஸ்பி மைக்கை பிடுங்கியதால் பொதுமக்கள் ஆவேசம்!
திருவாரூர்: 03.11.2026
திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட வேலியை அகற்றியதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் பிடாரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் இருப்பதாகக் கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அசோக்ராஜா தலைமையில் வேலி அமைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், ஏற்கனவே சுற்றுச்சுவர் இருந்த இடத்திலேயே வேலி அமைக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி அமைக்கப்பட்டிருந்த வேலியை, நேற்று மாலை கோயில் நிர்வாகத்தினர் அகற்றிவிட்டு மீண்டும் பள்ளி வளாகத்தின் உட்புறத்தில் வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலை மதிக்காமல் செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புலிவலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வேலி அமைக்கப்பட்ட இடம் தொடர்பாக இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, திருவாரூர் டிஎஸ்பி பொதுமக்கள் கையில் வைத்திருந்த மைக்கை பிடுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் எவ்வாறு பள்ளிக்கு அனுப்புவது எனக் கேள்வி எழுப்பிய பெற்றோர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டம் நடத்துவதற்கு முன்பு காவல்துறையிடம் மனு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்த நிலையில், ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது.
போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் மதிக்கப்படவில்லை எனக் கூறி, மாணவர்களுடன் பெற்றோர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேட்டி: விக்னேஷ்








