தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்
ஐஏஎஎஸ், ஐபிஎஸ் உள்ளடக்கிய அதிகாரிகளை போலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்ய அடுத்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாகும். அதில் தங்க நகைகள் விவரத்தையும் சொல்ல வேண்டும். எப்படி சொத்துக்கணக்கை தாக்கல் செய்வது என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் வருமானம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் பலருக்கும் எழும். இந்த விவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில உத்தரவுகள் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளடக்கிய அகில இந்தியப்பணி அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும். ஆனால் மற்ற ஊழியர்கள் சொத்து விவரங்கள் குறித்து பொதுவாக பொதுவெளியில் தெரியவராது என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல.., தமிழக அரசு ஊழியர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் சாய்குமார், ஐஏஎஸ்., அவர்கள். அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், அகில இந்தியப்பணி அதிகாரிகள் நீங்கலாக, அரசு ஊழியர்கள் அனைவரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி தங்களிடம் உள்ள சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை, 31-ந்தேதிக்குள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், களஞ்சியம் இணையதளத்தில் 3 படிவங்களில் தாக்கல் செய்து வருகிறார்கள். அதில் முதல் படிவத்தில் நிலம், வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது படிவத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், தங்க நகைகள், வங்கி வைப்புகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
மூன்றாவது படிவத்தில் கடன்கள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டியதும் அவசியம் ஆகும். இந்த 3 படிவங்களிலும் கேட்கப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, அவற்றை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பின்னர் உறுதிமொழி அளித்து இறுதியாகச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த விவரங்களுக்கான அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த சொத்து விவரங்கள் பதிவு செய்வதற்கு அடுத்த மாதம் டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாளாகும். அதற்குள் தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறிய செயலாக கருதப்படும் என்றும். மேலும், விவரங்களைத் தாக்கல் செய்த தேதி, ஊழியர்களின் ஆண்டு பணிப்பதிவில் குறிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும்போதும் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மேலும் இனிவரும் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், எனவே கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







