செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் டெல்லி பேரணிக்கு ரயிலில் செல்வதற்காக முன்பணம் கட்டிய நிலையிலும், திடீரென ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றத்திற்கான பேரணி என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முன்பணமும் பெற்றுக் கொண்ட நிலையிலும், டெல்லி பேரணிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கு திடீரென அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கேசவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













