திருவாரூரில் எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை
புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள் – அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
களத்தில் இறங்கிய செய்தியாளர்கள் – கடைக்கு அதிரடி அபராதம் விதித்த ஆட்சியர்…
களத்தில் இறங்கிய செய்தியாளர்கள்… புகாருக்கு உடனடி நடவடிக்கை!
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், நகரின் மிக முக்கியமான இடத்தில் இந்த கடை அமைந்துள்ளதால், தினமும் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கடைக்கு வந்து செல்கிறார்கள். இந்த பேக்கரியில் விற்கப்படும் டீ, காபி, பப்ஸ், கேக் வகைகள், பக்கோடா, மிச்சர் உள்ளிட்ட கார வகைகள், பன்னீர், கருப்பு கலர் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் குளிர்பானங்கள் என இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் எம்ஆர்பியை விட அதிகமாக விற்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான மக்கள் கடைக்காரர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு சென்றாலும், ஒரு சிலர் எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு ஏன் விற்பனை செய்கிறீர்கள்..? என்று கேள்வி கேட்டால், நாங்கள் அவ்வாறு தான் விற்போம். தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இங்கிருந்து சென்று விடுங்கள் என கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் அராஜகமான முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஒரு சில பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை மற்றும் வணிகவரித்துறை நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் புகார் தெரிவித்த போதும், அந்தந்த துறை அதிகாரிகள் இந்த பிரச்சனை தங்கள் துறைகளுக்கு சம்பந்தப்பட்டது இல்லை எனக்கூறி ஒதுங்கி கொள்வதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு தெரிந்தவுடன்..
கள நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்வதற்காக நேரில் அங்கு சென்ற செய்தியாளர்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக 11 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ள, கௌரிஸ்வரி குளிர்பானத்தை அருந்திவிட்டு பணம் கொடுக்கும் போது 15 ரூபாய் கொடுங்கள் என கடை ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
எம் ஆர் பி விலையை விட ஏன் அதிகம் இருக்கிறீர்கள்? ஏன் அதிகம் கொடுக்க வேண்டும்? அவ்வாறு உங்களை யார் வசூலிக்க சொன்னது? என பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியவுடன் 12 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கடை ஊழியர்கள் மீண்டும் கூறியுள்ளனர். இருந்த போதும் செய்தியாளர்கள் எம்ஆர்பி விலையை விட ஏன் அதிகம் கொடுக்க வேண்டும் என தொடர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கடை ஊழியர்கள் எங்கள் ஓனர்தான் இவ்வாறு வாங்க சொன்னார் என்று கூறியவுடன், கடை உரிமையாளரிடம் சென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது…
கடையில் வேலை செய்வதற்கு கூலி ஆட்கள் அதிக அளவு ஊதியம் கேட்கிறார்கள், 24 மணி நேரமும் கடை செயல்படுவதால் மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, ஃப்ரீசர் பயன்படுத்துகிறோம். இதனால் தான் எம்ஆர்பியை விட அதிக அளவில் விற்கிறோம் என அவர் காரணம் கூறினார்.
இருந்தபோதும் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பது தவறு என்பதை இந்த கடையின் உரிமையாளர் உணர்ந்து கொள்ளவே இல்லை.
எம்ஆர்பி விலையை விட அதிகமாக பணம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இதனால் செய்தியாளர்கள், அவர்கள் கேட்ட பதினைந்து ரூபாயை ஆதாரத்திற்காக தங்களது வங்கி கணக்கு மூலம் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து அனுப்பினர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரனுக்கு செய்தியாளர்கள் தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையில் நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறிந்து ஸ்பாட் பைனாக 15 ஆயிரம் ரூபாயை கடைக்கு அபராதம் விதித்து சென்றுள்ளனர்.
அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் இனிமேல் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கக் கூடாது என கடை ஊழியர்களை எச்சரித்து விட்டு சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிகமாக விற்கக் கூடாது என்றும், அவ்வாறு விற்பனை செய்யபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.














