தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் ஆடிமாத பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் நிலைக்க வேண்டியும், திருமணம் கைகூட வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் இதில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கை அம்மனாக பாவித்து புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும் ஆலய அர்ச்சகர் கூறும் மந்திரங்களுக்கு ஏற்ப குங்குமத்தால் காமாட்சி விளக்கு மற்றும் குத்துவிளக்கிற்கு பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்களப்பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.













