குடும்பத் தகராறில் கொடூரம்: கீழ்வேளூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை – தலைமறைவான நபருக்கு போலீஸ் வலை வீச்சு;
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான ரமேஷ் – பிரவீனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா தன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர், கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருடன் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குறுக்கத்தி பகுதியில் பிரவீனா கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று குமாருக்கும் பிரவீனாவுக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவின் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிரவீனாவின் மகள், தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல்துறையினர், பிரவீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.













