மூன்று மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டு கொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஆபத்துக் காலங்களில் பொதுமக்களை காப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளை அமைச்சர்கள் பார்வையிடுவதற்காக காட்சிபடுத்தி வைத்திருந்தனர். இதற்காக மதியம் ஒரு மணியிலிருந்து ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் என 30க்கும் மேற்பட்டோர் மொட்டை வெயிலில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இந்த நிலையில் வருகை தந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஸ்ரீநாத், விஸ்வநாதன் ஆகியோர் இவர்களை கண்டுகொள்ளாமல் சென்றதால் அதிருப்தி அடைந்தனர்.
எல்நினோ தாக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக 40 டிகிரிக்கு மேலாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல், மதிய உணவையும் வழங்காமல், அமைச்சர்களின் பார்வைக்காக கருவிகளுடன் காத்திருந்தபோது ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் சென்றது வேதனையை ஏற்படுத்தி உள்ளது













