மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக வரலாறு. காவிரியில் ஐப்பசி மாதம், கங்கை முதலான புண்ணிய நதிகள் கலந்து ஓடுவதாக ஐதீகம். இதனை முன்னிட்டு, ஐப்பசி மாதம் 10நாட்களும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களின் சுவாமி, அம்பாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், அய்யாரப்பர் ஆலயம், காசி விஸ்நாதர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது, திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு மயூரநாதர் — அவையாம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, மாங்கல்ய தாரணம் எனப்படும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.














