மன்னார்குடி அருகே திமுக பொருளாளர் டி ஆர் பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் – செந்தில் பாலாஜி, எ.வ.வேலுவை தொடர்ந்து டி ஆர் பாலுவுக்கு குறி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் பகுதியில் திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலுவுக்கு சொந்தமான கோல்டன் வாட்ஸ் தனியார் மதுபானம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பல்வேறு வகைகளில், பல்வேறு விலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முன்னாள் திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரசு மதுபான கூடமான டாஸ்மாக்குக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபானங்கள் தயாரிக்கும் மதுபான ஆலைகள், அவர்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் பகுதியில் திமுக பொருளாளர் டி ஆர் பாலுவுக்கு சொந்தமான கோல்டன் வாட்ஸ்
மதுபான தயாரிப்பு ஆலையில் கடந்த இரண்டு மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சித்ரா தலைமையில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மதுபான ஆலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விபரம், எத்தனை வகைகளில் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, தயாரிக்கப்படும் மதுபானங்களின விலை விபரங்கள் மற்றும் கொள்முதல் செய்யப்படும் விலை விபரங்கள், அது குறித்த ஆவணங்கள், எந்தெந்த நிறுவனங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன, நாளொன்றுக்கு எவ்வளவு பதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன, மதுபானங்களை விற்பனை செய்ததற்கான ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குறி வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எவ.வேலு ஆகியோரை தொடர்ந்து தற்போது திமுக பொருளாளர் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு குறி வைத்ததால் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது













