நாகை அருகே ஆவராணி ஊராட்சியில் உழவர் பாதுகாப்பு திட்ட நிதிக்கு 7,500 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது:
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுத் தர 7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆவராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் ஆனந்தன், விவசாயியான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்காக ரேணுகா விண்ணப்பித்திருந்தார். இதற்காக ஆவராணி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரான செல்வத்தை அணுகி, உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்.
ஆனால், அந்தப் படிவத்தைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் செல்வம், ரேணுகாவிடம் 7,500 லஞ்சமாகக் கேட்டுள்ளார். விவசாயக் கூலித் தொழிலாளியான ரேணுகா, இதனால் மிகுந்த மனவேதனை அடைந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரை அணுகிப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வத்தைப் பிடிக்கத் திட்டம் வகுத்தனர். அதன்படி, போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த 7,500 பணத்தை ரேணுகா கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. இமயவர்மன் தலைமையிலான காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார், செல்வத்தை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

















