தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சட்ட நடவடிக்கைகள் குறித்து 30 நிமிடங்கள் ஆலோசனை. கைது நடவடிக்கையினால் அன்பில் மகேஷ் உறுதியுடன் உள்ளார், இன்னமும் உறுதியுடன் இருப்பார் என சேகர்பாபு பேட்டி.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுடன் சென்ற உதயநிதி, அன்பில் மகேஷிற்கு ஜாமீன் பெறுவது மற்றும் அடுத்தகட்ட சட்ட ரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் அன்பில் மகேஷுடன் சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் பின்னர் பேட்டி ஏதும் அளிக்காமல் சிறையில் இருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஓடி ஒளியக்கூடியவர் அல்ல என்றும், பாரம்பரியமாக 3வது தலைமுறையாக திமுகவில் பயணிப்பவர் என்றும், காவல்துறை அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கியவர் என்றும், காவல்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருவதாக கூறிய நிலையில், அடிப்படை முகத்திரங்கள் ஏதுமில்லாமல் அன்பில் மகேஷை கைது செய்து திமுகவை மிரட்ட பார்க்கிறார்கள் எனவும், மிரட்டலுக்கு அஞ்சுவது திமுக கிடையாது என்றார். கட்டையை எடுத்து சொந்த குடும்பத்தை தாக்கியது திமுக கிடையாது எனவும், குடும்பப் பாசத்துடன் இருக்கின்ற இயக்கம் திமுக என நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு பதிலளித்தார். அன்பில் மகேஷ் கூடுதல் வசதிகள் ஏதும் கோர மாட்டார் எனவும், சிறைத்துறை அனுமதிக்கும் சலுகைகளை தவிர்த்து கூடுதல் வசதி கேட்க மாட்டார் எனவும், கைது நடவடிக்கையால் அன்பில் மகேஷ் உறுதியுடன் உள்ளார், இன்னமும் உறுதியுடன் இருப்பார் என கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு துணை நிற்கும் வரை எங்களுக்கு அச்சம் இல்லை எனவும், மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாற்ற நினைத்திடும் சிறைச்சாலை என்ற பாரதிதாசன் வரிகளை மேற்கோள்காட்டி பதில் அளித்தார். முதலமைச்சர் கூறியது போல 3 கோப்புகளில் ஒரு கோப்பு திறக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு புறப்பட்டு சென்றார்.
பேட்டி:
சேகர்பாபு (முன்னாள் அமைச்சர்)

















