ஆட்டோ, கார் ஓட்டுநர் தொழிலாளர்களைப் பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் வகுத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் மயிலாடுதுறையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்டோ, கார் ஓட்டுநர்களின் தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் வகுத்திட வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோவுக்கு தினமும் 5 லிட்டர் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும், ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வேண்டும், அரசு ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















