வேளாங்கண்ணி பெருவிழா: அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை;
பேட்டி -பிரவீன் குமார் -மாவட்ட ஆட்சியர்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களிடம் தங்கும் விடுதி உரிமையாளர்களோ, ஆட்டோ ஓட்டுநர்களோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து 525 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் 4 எஸ்பிக்கள் தலைமையில் 2,432 காவலர்கள் மற்றும் 378 போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை, 15 கண்காணிப்புக் கோபுரங்கள், 300 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 3 ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
7இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், கடற்கரையில் நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் மூலமான பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 12 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும்.
முன்னதாக, வாகன நிறுத்துமிடங்கள், கழிப்பறைகள் மற்றும் பேராலயக் கொடியேற்றும் பகுதி ஆகியவற்றை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.













