வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி: 3 கி.மீ. பரப்பளவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், நாலுவேதபதி ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கடற்கரை தூய்மைப் பணி விழிப்புணர்வுடன் நடைபெற்றது.
‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதன்மைச் சேவகர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, நாலுவேதபதி உலகநாதன் தெரு கடற்கரை முதல் அரக்கரை கடற்கரை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்விற்கு, அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் சண்முகராசு தலைமை தாங்கினார். முன்னதாக, கடல் அன்னைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுப் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இதில் முன்னாள் ராணுவ வீரர் குணசீலன், ஆசிரியர்கள் இரவீந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் சௌந்தரராஜன், உதயகுமார், கவிசேகர், ரமேஷ், சேகர் (எ) குணசேகரன், அருள்முருகன், விக்னேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, “சுற்றுச்சூழலைக் காப்போம்! எதிர்காலத்தைக் காப்போம்!” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு கடற்கரையில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை அகற்றினர்.
இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்பனா யோகீஸ்வரன் அவர்களுக்கு அப்பகுதிப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.













