கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்:
மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை பாசன நீர் வந்து சேராததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிக்கல், தேவூர், மேலப்பிடாகை, கொத்தங்குடி, கரியாபட்டணம் மற்றும் திருமருகல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தேவூர் கடைத்தெருவில் கீழ்வேளூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மதியழகன் நாகராஜா முன்னிலையில் கீழ்வேளூர் – கச்சனம் பிரதான சாலையில் திரண்ட ஏராளமான விவசாயிகள், கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகப் பாசன நீர் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், குறுவை சாகுபடிக்குக் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைத் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பயிர்க்கடன் பெறத் தேவையான சிட்டா, அடங்கல் வழங்க மறுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். திருப்பஞ்சனம் கிராம பாசன வாய்க்காலில் ஷட்டர் இல்லாததால் தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உடனடியாகப் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியலால் கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் கலைந்து சென்றனர்.

















