உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது ; இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பிராத்தனை :
நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 470ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது. சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் 10க்கும் மேற்பட்ட மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து நாகை மற்றும் நாகூர் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்து இன்று காலை நாகூர் தர்கா வந்தடைந்தது. சந்தனக்கூட்டில் இருந்து தர்கா பரம்பரைக் கலிபா மற்றும் ஆதினங்கள் மூலம் சந்தனக்குடம் தர்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டது. நாகூர் ஆண்டவர் சமாதிக்கு பாரம்பரிய முறைப்படி சடங்குகளுடன் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனம் பூசி மயக்கமடைந்து தூக்கி வரப்பட்ட தர்காவின் கலிபாவை இஸ்லாமியர்கள் பக்தி பரவசத்துடன் தொட்டு வணங்கினர். விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார். சந்தனம் பூசும் நிகழ்வினை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நாகூரில் குவிந்துள்ளனர்.
நாகை தஞ்சை திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகூர் கந்தூரியை விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.







