முழு இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்னும் திரைக்கு வருவதற்குள், ஒரு மொழி விவாதத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் பல்வேறு மொழிகளில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பர நிகழ்வுகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் பேசும்போது, நடிகர் கமல்ஹாசன்,
“உயிரே உறவே தமிழே! எனது வாழ்க்கையும் குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்”
என்று கருத்து தெரிவித்தார்.
இத்தகவல் கர்நாடகாவில் பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “கன்னட மொழிக்கு தனித்துவமான வரலாறு உள்ளது. அது தமிழ் மொழியில் இருந்து பிறந்தது அல்ல,” எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பலர் எதிர்வினை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த கமல்ஹாசன்,
“அவர்கள் என் பேச்சை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் கூறிய தகவலையே நான் அன்போடு பகிர்ந்தேன்,”
என்று கூறினார்.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி,
“கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தவறாக பேசியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காத பட்சத்தில், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்று திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுத உள்ளோம்”
என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், திரைப்பட ரசிகர்களிடையே பதற்றம் ஏற்பட்டு, கர்நாடகா மாநிலத்தில் ‘தக் லைஃப்’ படம் திரையிடப்படுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.