பள்ளி ஆசிரியரிலிருந்து திரைப்பட நடிப்புக்கும், சின்னத்திரை வரலாற்றுக்கும் ஒரு மென்மையான பயணம்
சென்னை – தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று (மே 29) காலமானார். 75 வயதாகும் இவர், இன்று காலை திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டாலும், வழியிலேயே உயிரிழந்தார்.
1949 டிசம்பர் 20ஆம் தேதி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், மேலநத்தம், அணைக்காடு உள்ளிட்ட ஊர்களில் கல்வி முடித்து, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பியூசி படித்து, பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று சென்னைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆசிரியர் பணியிலும், சினிமா ஆசையிலும் காலம் கழித்த ராஜேஷ், நடிகை சுகுமாரியின் பரிந்துரையில் இயக்குனர் கே. பாலசந்தரிடம் அறிமுகம் பெற்றார். 1974-ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் சிறு வேடத்தில் நடித்ததே, அவருடைய திரைபயணத்துக்கான முதல் படி.
1979-ல் ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் வெற்றியில் பிறகு ரசிகர்களிடம் பிரபலமானார். பாக்யராஜ் எழுதி இயக்கிய இந்தப் படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
150-க்கும் மேற்பட்ட படங்கள், எண்ணற்ற சின்னத்திரை தொடர்கள்
‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சிறை’, ‘ஆலயதீபம்’, ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் விமர்சன பெருமக்களையும், ரசிகர்களையும் கவர்ந்தார். மென்மையான டயலாக் மற்றும் கணீர் குரலுடன் அவர் விளங்கினார்.
சின்னத்திரையிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ‘அலைகள்’, ‘அக்கா’, ‘ஆண்பாவம்’, ‘ரோஜா’, ‘சூர்யவம்சம்’ உள்ளிட்ட தொடர்களில் ஆளுமை மிக்க கதாப்பாத்திரங்களில் நடித்து பாராட்டப்பட்டார்.
மேலும், மலையாள நடிகர்கள் முரளி, நெடுமுடி வேணுவுக்கு டப்பிங் கொடுத்ததன் மூலம் பின்னணி குரலிலும் திறமையைக் காட்டினார்.
பலதரப்பட்ட பயணங்கள் : ஜோதிடம், தொழில்முனைவோர் வாழ்க்கை
திரைப்படத் துறைக்கு அப்பாலும், ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார். ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்று, அதைப் பற்றிய புத்தகங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
அவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே மரணமடைந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவை மென்மையால் வசீகரித்த கலைஞனின் பயணம் இன்றுடன் நிறைவு.