நாகை அருகே 200 ஆண்டுகள் பழமையான தூய யோவான் ஸ்நானகன் ஆலயம்: பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மதநல்லிணக்க மையமாகத் திகழும் சிறப்பு:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சி.எஸ்.ஐ தூய யோவான் ஸ்நானகன் ஆலயம், சுமார் 200 ஆண்டுகளைக் கடந்து அப்பகுதி மக்களின் மதநல்லிணக்க அடையாளமாகவும் நம்பிக்கையின் சின்னமாகவும் கம்பீரமாகத் திகழ்கிறது.
இவ்வாலயம் 1845-ஆம் ஆண்டுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால், இப்பகுதியில் வாழ்ந்த எளிய விவசாயப் பெருமக்களின் ஆன்மீக நல்வாழ்விற்காக இவ்வாலயம் நிறுவப்பட்டது. தலைமுறை தலைமுறையாக நோய் தீர்க்கும் வழிபாட்டுத் தலமாகவும், கிராம மக்களின் நம்பிக்கைக்குரிய இடமாகவும் விளங்கி வருகிறது.
கடலோரப் பகுதியில் பலமுறை ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நின்ற இக்கோவில், அண்மையில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் பிரிட்டிஷ் கட்டடக் கலையிலேயே நேர்த்தியாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சூரிய ஒளியில் சுடப்பட்ட செங்கற்கள், கடுக்காய் மற்றும் பாரம்பரிய சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட ஆலயச் சுவர்கள் எவ்வித சேதமுமின்றிப் பாதுகாக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேலும், எழில் கொஞ்சும் மணற்குன்றுகளுக்கு நடுவே பசுமையான இயற்கைச் சூழலில் அமைந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த பேராலயத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் தினசரி வந்து வழிபட்டுச் செல்கின்றனர். குறிப்பாக அதிகாலை வேளையில் வெளியூர் செல்வோர், உள்ளூர் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் ஆலய முகப்பில் நின்று பிரார்த்தனை செய்துவிட்டுத் தங்களது அன்றாடப் பணிகளைத் தொடங்குவது பல தலைமுறைகளாகத் தொடரும் வழக்கமாக உள்ளது. வரலாற்றுச் சுவடுகளையும் பாரம்பரியக் கட்டடக் கலையையும் பாதுகாத்து நிற்கும் இத்திருத்தலம், நாகை மாவட்டத்தின் சிறந்த ஆன்மீக மற்றும் மதநல்லிணக்க மையமாகத் தொடர்ந்து மிளிர்ந்து வருகிறது.
இந்தப் பேராலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் 14ஆம் தேதி பிறப்பு விழா செய்யப்பட உள்ளது

















