இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கமல், சிம்பு, அசோக் செல்வன், நடிகைகள் த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்தனர். அப்போது நடிகை த்ரிஷாவிடம் அவரது திருமணத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா, “எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு திருமணம், செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தனது பழைய நேர்காணல் ஒன்றை நினைவுகூர்ந்து பதிலளித்தார். அதன்படி, ”என் நெருங்கிய நண்பர் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, எம்.பி.ஜான் பிரிட்டாஸ் தன்னை பேட்டி எடுத்தபோது, ’பிராமண குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இந்த மாதிரி இரண்டு கல்யாணம் எல்லாம் செய்துகொள்வீர்களா’ எனக் கேட்டார். அதற்கு நான், ’பிராமண குடும்பத்திற்கும் கல்யாணம் செய்துகிட்டதற்கும் என்ன சம்பந்தம்’ என கேட்டேன். அதற்கு அவர், ,நீங்கள் குடும்பிடும் கடவுள் ராமராச்சே. அதையாவது ஃபாலோ செய்ய வேண்டாமா’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘சாமி கும்பிடுவதே இல்லை. தவிர, அப்படிப் பார்த்தால்கூட நான் ராமனின் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் பாக்கி இருக்குனு சொன்னேன்’ ” என்றார்.
நடிகர் கமல்ஹாசன் முன்னதாக வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் அவரை, விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு சரிஹாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஸ்ருதி, அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவரும் நடிகையாக வலம் வருகின்றனர். என்றாலும், 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கமல்- சரிஹா ஜோடியும் விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.