இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் “தக் லைஃப்” வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ட்ரைலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இப்படம் திரைக்கு வருவதை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தற்போது, ‘தக் லைஃப்’ படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. இயக்குநர் மணி ரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்கும் ப்ரோமோ நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் மணி ரத்னம் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது, “இப்போது கமலுடன் இணைந்துள்ளீர்கள். ரஜினியுடன் மீண்டும் ஒரு படம் பண்ண திட்டமா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“ரஜினி சாரை தான் கேட்கணும். அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை இருந்தால், அவர் கேட்க நேரம் இருந்தால், கண்டிப்பாக அவரை நான் கேட்பேன். ரொம்ப பெரிய ஸ்டாருடன் படம் பன்றோம் என்றால், அதற்கேற்ற தீனி இருக்க வேண்டும். சாதாரண கதையுடன் அவ்வளவு பெரிய ஸ்டார் கிட்ட போக முடியாது. அதே நேரத்தில் அவருடைய மார்க்கெட்டையும் கருத்தில் கொள்ள வேண்டியது தான்.” எனத் தெரிவித்தார்.
இதனால், எதிர்காலத்தில் ரஜினி – மணி ரத்னம் கூட்டணியில் ஒரு பெரிய படம் உருவாகும் வாய்ப்பு உள்ளதெனத் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.