மயிலாடுதுறை அருகே இளம் பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ள காதலனை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வாணாதிராஜபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி வளர்மதி.(3ழூ) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழனிவேல் இறந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக வளர்மதி மயிலாடுதுறையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்று வளர்மதி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வளர்மதியை காணவில்லை என புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளர்மதி இன்று காலை மல்லியம் அசிக்காடு ரோட்டில் மஞ்சள் வாய்க்கால் அருகே திருஞானம் என்பவருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் விரைந்து சென்று வளர்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாவட்ட எஸ்.பி. சினேகா பிரியா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார் வளர்மதியுடன் பழகி வந்த விக்ரம குத்தாலம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் மகேந்திரன்(33) என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில் கடந்த 3 மாதங்களாக வளர்மதியுடன், மகேந்திரன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். கொத்தனார் வேலை செய்து மகேந்திரன் சம்பாதித்த பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப தர மறுத்த வளர்மதி தன்னை திருமணம் செய்து கொள்ள மகேந்திரனை நிர்பந்தம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் நேற்று இரவு பணி முடித்து திரும்பிய வளர்மதியை அழைத்துச் சென்று தனிமையில் இருந்து விட்டு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து குத்தாலம் போலீசார் கொலை வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர். இரு மகள்களுக்கு தாயான வளர்மதி தகாத உறவினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.







