மொபைல் இ-சேவை குறித்து இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட நீதிபதி சத்தியதாரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாபிரியா ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மொபைல் இ-சேவை வாகனம் மூலம் இ-பைலிங் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனம் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட 20 இடங்களில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் இந்த விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. இந்த வாகனத்தில் இலவச சட்ட சேவை, சமரச மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து காணொலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தை மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாபிரியா ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இதில், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் காணொலி மூலமாகவும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.







