நாகை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது; ரூ.30,000 அபராதம் விதிப்பு! வேட்டைக்குப் பயன்படுத்திய ஏர்கன், வலைத்தட்டு, பேட்டரி ஒலிபெருக்கி ஆகியவை பறிமுதல்; பிடிபட்ட பறவைகளை வேட்டையாடியவர்களின் கையாலேயே பறக்கவிட்ட வனத்துறையினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட ஏர்கன், வலைத்தட்டு மற்றும் பேட்டரி ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் சியாம்சுந்தர் தலைமையிலான வனத்துறையினர் விழுந்தமாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணல்மேடு பகுதியில் மரத்தில் வலைத்தட்டு அமைத்து, பேட்டரி ஒலிபெருக்கி மூலம் குயில் ஓசையை எழுப்பி நூதன முறையில் குயில்களை வேட்டையாடிய ராஜமாணிக்கம் என்பவரையும், தெத்தி பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த வயல்வெளியில் ஏர்கன் மூலம் பறவைகளை வேட்டையாடிய நாகூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரையும் வனத்துறையினர் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட பறவைகள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட ஏர்கன், வலைத்தட்டு, பேட்டரி ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் ராஜமாணிக்கத்திற்கு ரூ.20 ஆயிரமும், முபாரக்கிற்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே வேட்டையாடப்பட்ட பறவைகளை வனத்துறையினர் உயிருடன் பாதுகாப்பாக மீண்டும் பறக்கவிட்டனர்.
மேலும், பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும், வேட்டையில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் நில உரிமையாளர்கள் மீதும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







