காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு!
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, அமைச்சர்கள் 2 மணி நேரம் காலதாமதமாக வந்ததால், காலை முதலே காத்திருந்த விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதில் களைப்படைந்த விவசாயி ஒருவர் வாகன நிறுத்துமிடத்தில் படுத்து உறங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழாவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நவீன ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடக்க விழாவும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வேங்கடராமன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துறை சார்ந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் காலை 8 மணிக்கே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். ஆனால், திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவில்லை. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக, நண்பகல் 12 மணிக்கு மேல்தான் அமைச்சர்கள் விழா மேடைக்கு வருகை தந்தனர்.
காலை 8 மணி முதல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததால் விவசாயிகள் மிகுந்த சோர்வடைந்தனர். இதில், காத்திருந்து களைத்துப் போன விவசாயி ஒருவர், ஆட்சியர் அலுவலக வாகன நிறுத்துமிடத்திலேயே (Parking) படுத்து உறங்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட அங்கிருந்த அரசு அலுவலர்கள், பதறியடித்து அவரை எழுப்பி அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா ஒருபுறம் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டாலும், “இனி வரும் காலங்களிலாவது பொதுமக்களையும் விவசாயிகளையும் இவ்வாறு மணிக்கணக்கில் காக்க வைக்காமல், அமைச்சர்கள் உரிய நேரத்திற்கு வர வேண்டும்” என அந்த விவசாயிகள் வேதனையை புலம்பி சென்றனர்.








