கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ. பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஊதியம் வழங்க கோரிக்கை – பூசாரிகள் பேரமைப்பு மனு
ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரி பூசாரிகள் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு நலவாரியத்தின் மூலம் மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக காணிக்கை வருவாய் உள்ள கோவில்களின் நிதியிலிருந்து வருவாய் இல்லாத கிராமப்புற கோவில்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், நலவாரியத்தில் பதிவு செய்த பூசாரிகளின் விவரங்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்து, அரசு ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, கோரிக்கை மனு அளிக்க வந்த பூசாரிகள் வேத மந்திரங்கள், பக்தி துதி பாடல்கள் மற்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.







