மயிலாடுதுறை அருகே தத்தங்குடி ரவுண்டானா பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்திற்கு உள்ளாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர், புறவழிச்சாலையில் ஒளிரும் எச்சரிக்கைகள் இல்லாததால், தொடரும் விபத்துக்கள் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தடாளன் கீழத் தெருவை சேர்ந்தவர் செல்வம் (36). இவர் கொல்லுமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு 25 ஆம் தேதி அதிகாலை காரில் ஊருக்கு திரும்பி உள்ளார். மங்கை நல்லூர் அருகே தத்தங்குடி ரவுண்டானாவில் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள ரவுண்டானா தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் முகம் கால்களில் காயத்துடன் செல்வம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வத்திற்கு ஏழு தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி பதிவு வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்க கூடிய சோலார் பிளிங்கர் விளக்குகள் மற்றும் பேரி கார்டுகள் இல்லாததே இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் சாலை தடுப்பு சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளதால் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போதிய எச்சரிக்கை விளக்குகள் மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிசிடிவி பதிவு பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







