மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 180 டாஸ்மாக் பணியிடங்களை நிரப்பும் வரை, பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க ஊழியர்கள் கோரிக்கை:-
மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 89 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என 270 பேர் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் தற்போது 10 மேற்பார்வையாளர், 170 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் மாவட்ட மேலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமையில் ஊழியர்கள், மாவட்ட மேலாளரை சந்தித்து, முதலில் 180 காலிப்பணியிடங்களையும் நிரப்பிய பிறகே ஊழியர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, பணியிட மாறுதலை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.








