திருவாரூரில் தண்ணீர் இன்றி காயும் பயிர்கள் – பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள் – மழை வேண்டி வித்தியாசமான முறையில் சேற்றில் மனித உருவம் செய்து, கும்மி அடித்து வழிபாடு செய்த பெண்கள் -சோகத்தில் மூழ்கிய டெல்டா மாவட்டங்கள்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட திருமதிகுன்னம், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், தாழைக்குடி, மேலராதநல்லூர், நீலனூர், சத்தியவாடி, செட்டிசிமிழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 40 நாட்களிலேயே நிறுத்தப்பட்டதால், இப் பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதுடன், வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களும் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே சாகுபடிக்காக பெரும் தொகையை செலவு செய்துள்ள விவசாயிகள், பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் மழையாவது பெய்து பயிர்களைக் காப்பாற்றாதா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மழையும் கைகொடுக்காததால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
வழக்கமாக கார்த்திகை, மார்கழியில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் பொய்த்து போனதால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். நீர்மூழ்கி மோட்டார் மூலம் தண்ணீர் வைத்தும் பயிர்கள் கருகி வருவதாக கூறுகின்றனர்.
இதையடுத்து மழை பெய்ய வேண்டியும், கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற வேண்டியும் திருமதிகுன்னம் பகுதியில் பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து “ஐயோ கொடும்பாவி” செய்து வித்தியாசமான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
20-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சாலையில் சேற்றால் உருவம் செய்து, அதைச் சுற்றி கும்மி அடித்து, பாட்டு பாடி மழை வேண்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இப்படி செய்தால் மழை வரும் என்பது தங்கள் ஐதீகம் என்றும், 20 வருடத்திற்கு முன்பு இப்படி செய்தபோது மழை வந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
“ஐயோ கொடும்பாவி” செய்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது மக்களின் பாரம்பரிய ஐதீகமாக இருந்து வரும் நிலையில், அதன் அடிப்படையில் இதனை இப் பகுதி பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் சாலையில் வைக்கப்பட்டுள்ள “ஐயோ கொடும்பாவி”க்கு மரியாதை செலுத்தி விட்டு தங்களால் முடிந்த தொகையை செலுத்தி விட்டு செல்கின்றனர்.
இது குறித்து பெண் விவசாயி ராணி கூறுகையில், “எங்க ஊரில் மட்டும் இல்லை, எங்க பார்த்தாலும் மழை இல்லை. விவசாயம் எல்லாம் காயுது. அரசாங்கமும் எந்த உதவியும் செய்யல. அதனால தான் காலையில் இருந்து இப்படி செய்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யணும். நாங்க விவசாயத்தை நம்பிதான் வாழ்கிறோம்” என்றார்.
மற்றொரு பெண் விவசாயி கலா கூறுகையில், “காலையில் இருந்து ஐயோ கொடும்பாவி செய்து பாட்டு பாடி கும்மி அடித்து கொண்டிருக்கிறோம். ஒரு டீ கூட குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். மழை வரணும்னு தான் இதை செய்கிறோம். வயல் எல்லாம் காய்ந்து விட்டது” “விவசாயம் நன்றாக இருந்தால் தான் மக்கள் நன்றாக இருப்பார்கள்” என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஒருபுறம் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள், மறுபுறம் மழையும் பெய்யாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள், தற்போது மழையை எதிர்பார்த்து “ஐயோ கொடும்பாவி” வழிபாடு நடத்தி வரும் சம்பவம் டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி : ராணி மற்றும் கலா – பெண் விவசாயிகள்







