ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியை இழந்த பிறகு ஒரு நிலைப்பாடு என்று மாறுவது திமுகவுக்கு புதிதல்ல.
திருப்பரங்குன்றத்தை மீண்டும் ஒரு அயோத்தி போல ஆக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. – சங் பரிவாரின் முயற்சி.
தமிழக மக்களும், இந்த மண்ணும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து அதை கண்டிப்பாக எதிர்ப்போம்.
இன்னமும் எடப்பாடி பழனிச்சாமி திமுகவோடு இணைந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாரா..?
அனிருத் திருமணத்தில் ஸ்டாலினும், எடப்பாடியும் பூட்டிய அறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தது, எப்படி ஆட்சியை கவிழ்க்கலாம் என்றுதானா..? என பாயிண்ட் பாயிண்டாக பேசி திருவாரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர் அருண்ராஜ்
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜிடம்…
எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டது குறித்து கேட்டபோது…
தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது எந்த நிலைப்பாட்டில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆளுநர் பதவியே தேவையில்லை என்று சொன்னதுடன், பல்வேறு குற்ற வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என மக்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள், உயர்நீதிமன்றம் என பல்வேறு தரப்பினரும் கூறியபோதும் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என மறுத்தது தி.மு.க. தான்.
அது மட்டுமல்லாமல், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்கு சென்ற கட்சியும் தி.மு.க. தான் என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என சொன்னபோது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனது தி.மு.க.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கிலும், சி.பி.ஐ. விசாரணை கேட்டபோது தி.மு.க. அரசு ஒத்துழைக்கவில்லை, மற்றும் ஒத்துக்கொள்ளவும் இல்லை.
மாணவி லாவண்யா உயிரிழந்த சம்பவத்திலும், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என சொன்ன கட்சி தான் தி.மு.க.
நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமலும் உச்சநீதிமன்ற வரை சென்ற கட்சிதான் திமுக. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியை விட்டு இழந்த பிறகு, மக்கள் தூக்கி எறிந்த பிறகு ஒரு நிலைப்பாடு என திமுக மாறுவது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல. இதைத்தான் காலம் காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, எங்கள் தலைவர் விஜய் அவர்களை பொறுத்தவரை, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நியாயமான விசாரணை நடக்கும் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு…
திருப்பரங்குன்றம் விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால் ஒரு விஷயம், திருப்பரங்குன்றத்தை மீண்டும் ஒரு அயோத்தி போல ஆக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. – சங் பரிவாரின் முயற்சி. தமிழக மக்களும், இந்த மண்ணும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து அதை கண்டிப்பாக எதிர்ப்போம். தமிழ்நாட்டு மண்ணின் இந்த மதச்சார்பற்ற கொள்கையை ஆணித்தரமாக அழுத்தி உயிர்நாடியாக பிடிப்போம் என்றார்.
எம் எல் ஏ அருள் விக்னேஷ் குறித்து கேட்டபோது…
அது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
ஆறு மாத காலத்தில் தவெக ஆட்சி கவிழும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து கேட்டபோது…
ஆறு மாதம் முடிந்து விட்டதே என்றார். மேலும், இன்னமும் திமுகவோடு இணைந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்களா…? ஏற்கனவே திமுக தலைவர் இதைத்தான் கூறினார். கூடிய விரைவில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை இழக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதைத்தான் எடப்பாடியும் சொல்லி இருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் திருமணத்தில் ஸ்டாலினும் எடப்பாடியும் பூட்டிய அறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தது இதைப் பற்றி தானா..? எப்படி ஆட்சியை கவிழ்க்கலாம் என்று பேசினார்களா..? என கேட்டு சொல்லுங்கள் என்றார்.
டெல்டாவில் தண்ணீரை அவசரப்பட்டு திறந்ததால் பல இடங்களில் பயிர் கருகி வருவது குறித்த கேள்விக்கு….
விவசாய அமைப்புகள் என்னை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். நிச்சயமாக துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் இதை எடுத்துச் செல்வோம் என்றார்.
பேட்டி: அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்







