வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனைக்குத் தடை: ஊர் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம்:
பேட்டி: கிராம மக்கள், கோடியக்காடு.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு ஊராட்சியில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடித்தல் மற்றும் உப்பளத் தொழிலை பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில், அரசு மதுபானக் கடைகள் ஏதும் இல்லை.
இருப்பினும், அருகிலுள்ள வேதாரண்யத்திலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, கோடியக்காடு பகுதியில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் அன்றாடம் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் மதுப்பழக்கத்தால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அண்மையில் தங்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டு காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். அதன்பின்னரும் கள்ளச்சந்தை மது விற்பனை தடுக்கப்படாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் அவசர ஊர் கூட்டத்தைக் கூட்டினர்.
இந்தக் கூட்டத்தில், “இன்று முதல் கோடியக்காடு ஊராட்சி எல்லைக்குள் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது” என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தத் தீர்மானத்தை மீறி யாரேனும் மது அல்லது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், அவர்களை ஊர் பொதுமக்களே பிடித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் ஒப்படைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







