திருவாரூரில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அகல் விளக்குகளை ஏந்தி, சாலையில் அமர்ந்து கைதட்டி தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் – போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி..
திருவாரூர், நவ. 24 –
திருக்கார்த்திகை தினமான இன்று, மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து திருவாரூரில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயில் ஆழிதேர் அருகே பழனி ஆண்டவர் கோயில் முன்பு திடீரென ஒன்று திரண்ட பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசையும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் கண்டித்து, “ஏமாற்றிவிட்டீர்களே, தமிழக மக்களை ஏமாற்றிவிட்டீர்களே, பதவி விலகு, பதவி விலகு ஜோசப் விஜய் பதவி விலகு, சட்டத்தையே மதிக்கவில்லை, உச்ச நீதிமன்றத்தையே மதிக்கவில்லை” என பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சாலையில் அமர்ந்து கைகளைத் தட்டி முழக்கமிட்டுப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும், திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சொக்கப்பனை நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டிருந்த நிலையில், திடீரென நடைபெற்ற சாலை மறியலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.







