விவசாயிகளின் கோரிக்கை.. இரண்டே நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த சீர்காழி கோட்டாட்சியர்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அக்டோபர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறை உதவி இயக்குனர் தாமோதரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள், கழிவுகள் கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ள கழுமலையாறு பாசன வாய்க்காலை உடனடியாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற கோட்டாட்சியர் பாலமுருகன், தாமதிக்காமல் நேரடியாகக் களத்தில் இறங்கி கழுமலையாறு பாசன வாய்க்கால் பகுதியை நேரில் பார்வையிட்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பல ஆண்டுகளாகக் கழிவுகள் தேங்கி நீரோட்டம் தடைபட்டிருந்த இந்த வாய்க்கால், பாசனத்திற்குப் பெரும் தடையாக இருந்து வந்தது. இதையடுத்து, மனு கொடுத்த இரண்டே நாட்களில் அதிரடியாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கழுமலையாறு பாசன வாய்க்காலைத் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன. நீர் வழிப்பாதை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் தடையின்றிப் பாயும் வகையில் இரவு பகலாகத் துரித கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனு அளித்த இரண்டே நாளில் களமிறங்கி உடனடி நடவடிக்கை எடுத்துப் பணிகளைத் தொடங்கி வைத்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகனுக்கு, அப்பகுதி விவசாயிகள் நேரில் சென்று மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
பேட்டி:
01.ராஜேஷ் விவசாயி.
02.கோவி செழியன் விவசாயி.







