மயிலாடுதுறையில் அரசு புறம்போக்கு இடம், குளத்தை தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டி, அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் வட்டாட்சியரின் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாபஸ்:-
மயிலாடுதுறையில் கால்டெக்ஸ்; அருகில் அரசு புறம்போக்கு இடம் மற்றும் தாவா குளத்தை தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டியும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அவற்றை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சசிகலா, காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் போராட்டக்குழுவினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், வள்ளலார் கோயில் அருகில் உள்ள குளத்தை தீர்த்தக்குளமாக பயன்படுத்தி வருவதாகவும், அங்கு சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க அக்குளத்தின் முகப்பில் வேலி வைத்து தடுத்து பாதுகாத்து வைத்துள்ளதாகவும், அந்த வேலியை அகற்றிக்கொள்ள உடன்படுவதாகவும், குளத்தை ஒட்டிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கடைகளை அமைத்துள்ளோரிடம் கோயில் சார்பில் எந்த தொகையும் வசூலிக்கப்படவில்லை, அவர்களை அப்புறப்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை ஆவணங்களின்படி அரசுக்கு சொந்தமான தாவா குளத்தில் வேலியையும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டு, பணிகள் தொடங்கியது. மேலும், குளத்தின் எல்லை நில அளவர்கள் மூலம் அளவீடு செய்து முழு ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது, குளத்தின் மீன்பாசி குத்தகை உரிமை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. வட்டாட்சியரின் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

















