அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், வாசலில் யாருமில்லாத அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார் கோயிலில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் கல்லூரி வாசலில் அமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. விழா முடிவடைவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, அமைச்சரின் காரில் யாருமில்லாத நிலையில் ACக்காக கார் நின்ற நிலையில், தொடர்ந்து இன்ஜின் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிவடைந்த பின்பு அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டார். அரசுத்துறை செயலாளர்கள் பல துறைகளை கவனித்தாலும் சிக்கன நடவடிக்கையாக ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு மாநில அமைச்சர் சிக்கனம் பற்றி கவலைப்படாமல், கார் பல மணி நேரம் ஆள் இல்லாமல் குளிரூட்டும் சாதனத்திற்காக இயங்கிக் கொண்டிருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.













