வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள் – பிறை நிலவுக்கு கீழே வைரக்கல் போன்று காட்சி அளித்த வெள்ளி கோள் – மொட்டை மாடிகளில் இருந்து மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்போனில் பதிவு செய்த மக்கள்..
வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வான, பிறை நிலவும், மிகப்பிரகாசமான வெள்ளி (Venus) கோளும் மிக அருகில் நெருங்கி வந்த அரிய காட்சியை வெறும் கண்களால் நேரில் பார்த்து திருவாரூர் பொதுமக்கள் ரசித்தனர்.
இன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மேற்குத் திசை அடிவானத்தில் இந்த அற்புதமான வானியல் நிகழ்வு அரங்கேறியது.
மேற்கு வானில் கீழ் பகுதியில் மெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகே, வைரக் கல் போல ஜொலிக்கும் வெள்ளி கோள் அற்புதமாக காட்சியளித்தது.
இந்த செப்டம்பர் மாதத்தில் வெள்ளி கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு நெருக்கமாக வருவதால், அது வழக்கத்தை விட மிக அதிக பிரகாசத்துடன் காட்சியளித்தது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் வானம் மிகத் தெளிவாக காட்சியளித்ததால் பொதுமக்கள் இந்த அரிய வானிலை நிகழ்வை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
குறிப்பாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் கூத்தாநல்லூர், கண்கொடுத்தவணிதம், கமலாபுரம், வண்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலிருந்தும், திறந்த வெளிகளிலிருந்தும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், தங்களது செல்போனில் இதனை அழகாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல, வரும் செப்டம்பர் 18 அன்று வெள்ளி கோள் இந்த ஆண்டின் மிக உச்சக்கட்ட ஒளிர்வை எட்டவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை நேரில் காண பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













