பத்திரிகையாளர்களை மிரட்டிய தவெக நிர்வாகிகளைக் கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மெத்தம்பெட்டமைன் (போதைப்பொருள்) பறிமுதல் மற்றும் அதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தும், காவல் நிலையங்களில் பொய் புகார்களை அளித்தும் வரும் நாகை மாவட்ட தவெக நிர்வாகிகளைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தவெக நிர்வாகிகளின் அத்துமீறலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

















