மயிலாடுதுறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் 25 சதவீத உற்பத்தி மூலதன மானியத்துடன் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் மதிப்பு கூட்டு மையம் திறப்பு:- மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் 100 மதிப்பு கூட்டும் மையங்கள் தொடங்கும் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர்கள் வங்கி கடன்கள் பெற்று மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் பணி மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் மயிலாடுதுறையை அடுத்த குளிச்சார் கிராமத்தில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர் பொன்னுசாமி என்பவரால் பாரத ஸ்டேட் வங்கியில் தொழில்கடன் பெற்று ரூ.1.27 கோடிபில் மதிப்புக்கூட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில் வறுத்த மசாலா, இட்லி பொடி, பஜ்ஜி, போண்டா ரெடி மிக்ஸ், அடை ரெடிமிக்ஸ் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்நிறுவனத்துக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை மூலமாக திட்ட மதிப்பில் 25 சதவீதம் உற்பத்தி மூலதன மானியமாக வழங்கப்பட உள்ளது. புதியதாக அமைக்கப்பட்ட இந்த மதிப்பு கூட்டு மையத்தை மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனுஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சுப்பையன், வேளாண் துறை இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















