விழுப்புரத்தில் பிரதமர் உரை நேரலைக்கு அனுமதி மறுப்பு: பாஜகவினர் திடீர் சாலை மறியல்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா மற்றும் அவர் மக்கள் பிரதிநிதியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, இந்தியா முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரதமர் உரை நேரலை நிகழ்ச்சிகளை நடத்த பாஜக சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் விழுப்புரம் நகராட்சி திடலில் பிரதமர் உரை நேரலை ஒளிபரப்புக்கு மனு அளித்திருந்த நிலையில், பேரணிக்கு மட்டும் அனுமதியளித்து நேரலை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சி அலுவலகத்திலேயே நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து பாஜகவினர் ஒன்று கூடி ஏற்பாடுகளைச் செய்தபோது, நேரலை ஒளிபரப்பு வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ய முற்பட்டதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் உடனடியாகக் கலைந்து செல்லுமாறு கூறியதாலும், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாலும் ஆத்திரமடைந்த பாஜக தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேட்டி: தர்மராஜ். தெற்கு மாவட்ட தலைவர்.















