மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்!
மயிலாடுதுறையில் இன்று காலை முதல் பரவலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பொதுமக்களும் உள்ளே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். அமைச்சர் ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்குள் சென்றதும், அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் இருவர், வாயிலில் தேங்கியிருந்த மழைநீரை அவசர அவசரமாக ‘மாப்’ (Mop) மூலம் தள்ளி வடிகாலில் வடிய வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியிருப்பது அமைச்சரின் பார்வைக்குத் தெரியாமல் மறைப்பதற்காகவே ஊழியர்கள் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக மழைநீர் தேங்குவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண நாட்களில் கண்டுகொள்ளப்படாத இந்தப் பிரச்சினைக்காக, அமைச்சர் வருகையின்போது மட்டும் ஊழியர்கள் மழைநீரை மாப் கொண்டு தள்ளி வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.







