விழுப்புரம் விழுப்புரத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம், அக்.7-
இந்திய மருத்துவ சங்கம் (IMA) விழுப்புரம் கிளை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சைத் துறை சார்பில் “PINKTOBER 2026 Chapter Five” உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் 300 பேரும், மயிலம் ரங்கபூபதி மற்றும் நுளு செவிலியர் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.
பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய பேரணி விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை வரை சென்றது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அக்டோபர் மாதம் முழுவதும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை இலவசமாக நடைபெறுகிறது. பெண்கள் தவறாமல் பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லூசி நிர்மல் மடோனர், மருத்துவக் கண்காணிப்பாளர் ரவிகுமார், பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் கணேஷ்குமார், IMA நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















