பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பழைய எண்ணெய் கிணற்றில் விரிவான விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு:- சைடு ட்ராக்கிங் முறையில் பக்கவாட்டில் குழாய் அமைத்து ஒன்றரை கிலோ மீட்டருக்கு பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பல்வேறு இடங்களில் எண்ணெய்- எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளது. இவற்றில் பல கிணறுகளில் எண்ணெய்- எரிவாயு வளம் குறைந்து விட்டதால், கைவிடப்பட்ட கிணறுகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக எந்த எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணியும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில முயற்சிகளையும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பழைய எண்ணெய் எரிவாயு கிணறான Kut-9 என்ற கிணற்றில் மீண்டும் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி முயற்சிப்பதாகவும், இதற்காக மிகப்பெரிய ராட்சத குழாய்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜகோபாலபுரம் கிராமத்துக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி கிணற்றை அண்மையில் பார்வையிட்டனர். இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிற அமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ‘KUT-9’ பழைய எண்ணெய் கிணற்றில் எவ்வித உரிய அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக விரிவான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றம் சாட்டி
பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்
பழைய எண்ணெய்கிணறு வளாகத்தில் ஆயிரக்கணக்கான குழாய்கள் குவிக்கப்பட்டு, ‘Rig’ இயந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது வழக்கமான பராமரிப்புப் பணி போல் இல்லாமல், புதிய விரிவான திட்டமாக நடைபெறுகிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அனுமதி எதுவும் பெறாமல், ‘Side Tracking’ மூலம் பக்கவாட்டுக் கிணறுகள் அமைக்கும் முயற்சி நடப்பதாகவும்,
காவிரிப் படுகையைப் பாதுகாக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் – 2020-ஐ நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பழைய கிணறு என்ற பெயரில் புதிய விரிவாக்கப் பணிகளை ஓ.என்.ஜி.சி முன்னெடுப்பதாகத் குற்றம் சாட்டினார்.
விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட திட்ட ஆவணங்களை அதிகாரிகள் முழுமையாகப் பரிசீலித்து, சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும் அதன் நகல்களை வழங்க வேண்டும்.
மக்கள் போராட்டம் வெடிப்பதற்குள் மாவட்ட ஆட்சியர் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டி பேராசிரியர் தா ஜெயராமன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்













