மயிலாடுதுறை அருகே சாலையோரம் டென்ட் கட்டி வாழ்ந்து வந்த நரிக்குறவர் சமுதாய மக்களை தேடி வந்த அதிகாரிகள் , பட்டா நிலம் , ஜாதி சான்றிதழ் மற்றும் முறையான கல்வி அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தனர் , பல ஆண்டு கோரிக்கை விஜய் அரசு அமைந்த இரண்டே மாதத்தில் நிறைவேறப்போவதால் மக்கள் மகிழ்ச்சி :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் நிலையம் எதிரே சாலையோரம் நரிக்குறவர் சமுதாய குடும்பத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் டென்ட் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டா கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவ வேண்டுமென பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் தற்போது தவெக ஆட்சி அமைந்த இரண்டு மாதத்திலேயே அதிகாரிகள் மக்களுக்கு உதவ முன்வந்து இருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் ராகவன் உட்பட பல்வேறு அதிகாரிகள் அம்மக்களை நேரில் சென்று இன்று சந்தித்தனர். மேலும் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அங்குள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் அவர்களை கணக்கெடுத்து பள்ளி செல்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தனர். அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் விஜய் ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் முதல்முறையாக எங்களை வந்து பார்த்து அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

















