சென்னை :
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு பல மாநிலங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் சென்னை நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அவரை குறிப்பிட்டு கமல்ஹாசன் உரையாற்றிய விதம், தற்போது கர்நாடகாவில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
“உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தின் ஒரு அங்கம்” என்று கமல் தெரிவித்தார்.
இவை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் மொழி ஆர்வலர்கள் இது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். “கன்னடம் ஒரு தனி மொழி; தமிழ் மொழியில் இருந்து பிறந்தது இல்லை” எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்வில் இதைப் பற்றி கேட்டபோது கமல்ஹாசன் பதிலளித்தார் :
“அவர்கள் என் பேச்சை தவறாக புரிந்துகொண்டார்கள். நான் மிகுந்த அன்போடு, வரலாற்று ஆய்வாளர்கள் சொன்னதையே தெரிவித்தேன். தமிழ்நாடு அனைவருக்கும் சொந்தம். கன்னட ஐயங்காரும், மேனனும், ரெட்டியும் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சர் ஒரு பிரச்னையில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இது போலவே பலரும் தமிழ் நாட்டை தங்கள் வீடாகவே கருதுகிறார்கள்.” மேலும்,
“மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல்வாதிகள் பேச தகுதியற்றவர்கள். இது எனக்கும் பொருந்தும். இத்தகைய விவாதங்களை மொழியாளர்கள், வரலாற்று மற்றும் தொல்லியல் நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டும். நான் சொன்னது பதில் அல்ல – விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” என்றார்.
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பிரச்சாரம் வேகமாக நடைபெற்று வரும் இந்த சூழலில், இப்படியொரு மொழிசார் சர்ச்சை பெரிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.