காஞ்சிபுரம் – பழமையான நவகிரக பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பரிதீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இத்தலம், சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தலமாக பார்க்கப்படுகிறது.
சூரிய பகவான் சாப விமோசனத்திற்கு இங்கு தீர்த்தக்குளம் அமைத்து, ஈசனை வழிபட்டு ராஜயோகம் பெற்றதாக ஐதீகம் கூறுகிறது. இக்கோவிலில் சூரிய பகவான் தனிச்சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன், பத்மபீடத்தில் நின்று அருள்பாலிக்கிறார்.
கோவில் சிறப்பம்சங்கள்:
- கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, ராஜகோபுரம் இல்லாமல் எளிமையான நுழைவு வாசல் கொண்டது.
- இடதுபுறம் அக்னி விநாயகர், பின்புறம் வல்லப கணபதி, வலப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன.
- கருவறையில் பரிதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவலிங்க ரூபமாக ஈசன் அருள்கிறார்.
- நவகிரக சன்னிதி இங்கு இல்லை.
- தல விருட்சம்: வில்வமரம்
- தீர்த்தம்: பரிதி தீர்த்தம் (சூரிய தீர்த்தம்)
வழிபாட்டு முறை மற்றும் பிரார்த்தனை:
ஏழு நெய் தீபம் சூரிய பகவானுக்கும், ஐந்து நெய் தீபம் ஈசனுக்கும் ஏற்றி வேண்டுதல் வைக்க வேண்டும். அரசுப் பதவிகள், திருமண வாழ்க்கை உள்ளிட்ட வரங்களை நாடுபவர்கள், சூரிய பகவான் சன்னதியை ஏழு முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உற்சவங்கள்:
மாத சப்தமி, ரத சப்தமி, மகர சங்கராந்தி, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாள் மற்றும் திருவிழாக்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கோவில் திறப்புநேரம்:
- திங்கள் முதல் சனி வரை: காலை 6:00 முதல் இரவு 8:00 வரை
- ஞாயிறு: காலை 6:00 முதல் பகல் 12:00 வரை
இடம்:
இக்கோவில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு விதைப்பண்ணை வளாகத்தின் அருகில் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.