மும்பை : பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பல திகில், ஆக்ஷன் கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் முகுல் தேவ் (வயது 54) நேற்று (மே 23) இரவு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த செய்தியை, நடிகையின் மற்றும் முகுலின் நெருங்கிய தோழியான தீப்ஷிகா நாக்பால், தனது சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். “இது என் வாழ்க்கையின் மிக பெரிய அதிர்ச்சி. அவரை இழந்தது இன்னும் நம்ப முடியவில்லை. அவர் இனி இல்லையே என்ற உண்மை மிகக் கொடூரம். அவர் ஒரு அருமையான நடிகர் மட்டுமல்ல, மனிதராகவும் அழகான நபர். திரையுலகிற்கு இது மிகப்பெரிய இழப்பு” எனக் கூறியுள்ளார்.
யார் இந்த முகுல் தேவ்?
புதுடெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த முகுல் தேவ், ஜலந்தருக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். பிரபல நடிகர் ராகுல் தேவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 8ஆம் வகுப்பு படிக்கும் போதே ஒரு டிவி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப் போல நடனம் ஆடி பரிசு பெற்றவர்.
பின்னர், விமானியாக பயிற்சி பெறும் நோக்கில் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் கல்வி கற்றார். ஆனால், பின்னர் திரைத்துறையை தேர்வு செய்தார்.
1996ஆம் ஆண்டு மும்கின் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் விஜய் பாண்டே என்ற கதாப்பாத்திரம் மூலம் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, ஏக் சே பத்கர் ஏக் மற்றும் ஃபியர் ஃபேக்டர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
திரைப்படங்களில் தஸ்தக் (ஏசிபி ரோஹித் மல்ஹோத்ரா), ஜெய் ஹோ, சன் ஆஃப் சர்தார், ரன், ரக்தசரித்ரா, இந்திரா – தி டைகர் ஆகியவற்றில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்தவர். அவரது கடைசி படம் அந்த் தி எண்ட் என்ற இந்திப் படமாகும்.