ராஞ்சி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணி 2018ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் இருந்து தொடங்குகிறது. அக்கூட்டத்தில், அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷாவை குறித்தும், அவரது பின்னணி தொடர்பாகவும் ராகுல் காந்தி சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார்.
இவ்வுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த பிரதாப் கட்டியார் என்பவர், ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் குற்றம்சாட்டி, சாய்பாசா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2020ம் ஆண்டு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு ராஞ்சியில் உள்ள எம்.பி./எம்.எல்.ஏ. விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டும், ராகுல் காந்தி நேரில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 26ஆம் தேதி அவசியமாக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2018ம் ஆண்டு கர்நாடகா தேர்தலின்போது அமித் ஷாவை குறித்து ராகுல் கூறிய மேலும் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை மையமாகக் கொண்டு, பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வக்கீல்களின் பயிற்சி நிகழ்ச்சி காரணமாக அந்நாளில் விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.