திருவாரூரில் தொடர் மின்வெட்டு – நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் – மன்னார்குடி – சென்னை நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 2 மணி நேரங்களும் கிராமப் பகுதிகளில் 5 மணி நேரங்களும் மின்வெட்டு என்பது சர்வ சாதாரணமாக தொடர்ந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் மின்வெட்டு என்பது வழக்கமாக மாறி உள்ளது. குறிப்பாக கண்கொடுத்தவனிதம், கொரடாச்சேரி, ஏருக்காட்டூர், மேலராதாநல்லூர், கூத்தாநல்லூர், லட்சுமாங்குடி, சவளக்காரன், கோரையாறு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் தினந்தோறும் மூன்று முதல் ஐந்து மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு நீடித்து வருகிறது. இங்குள்ள மக்களும் ஐந்து மணி நேரம் மின்வெட்டிற்க்கு பழகிவிட்டனர்.
இருந்த போதும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தொடங்கிய மின்வெட்டு நள்ளிரவு வரை தொடர்ந்ததால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் மன்னார்குடி – திருவாரூர்- சென்னை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி திருவாரூர் சென்னை நெடுஞ்சாலையில் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லயன் மேன் உள்ளிட்ட மின்துறை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொள்ள வேண்டும் அவர்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாகவும்., மின்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் எனவும் கூறி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட வந்த போலீசாருடன் பொதுமக்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.













