மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் அருகே வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை தாக்கி மிரட்டி நகை பணம் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் சிறையில் அடைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் அருகே பாடகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி.75. ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் ஓட்டை பிரித்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமியை தாக்கி மிரட்டி ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான். இதுகுறித்து ஜெயலட்சுமியின் மகன் முத்துக்குமாரசாமி பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்பி சினேஹா ப்ரியா உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீசார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை சோதனை செய்து அதன் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது அலி மகன் முஜிபுர் ரஹ்மான்(34), திருநள்ளாறு தஸ்தகீர் மகன் சதாம் உசேன்(25), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பாவட்டக்குடியை சேர்ந்த கருணாகரன்(51) ஆகிய மூவரும் ஈடுபட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மூவரையும் கைது செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலையூர் போலீசார் அவர்களிடமிருந்த ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.














